1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (16:13 IST)

கல்வி உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் : ராமதாஸ்

கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களை அனுமதிப்பதில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஏழை மாணவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.


 


பெரும்பாலான பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி நிரப்பப்பட வேண்டிய 25% இடங்களில் பெரும்பாலானவை பணக்கார மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
 
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அவர்களின் வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் 2009&ஆம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
 
அக்குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பில் தொடங்கி எட்டாம் வகுப்பு வரை இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும் என்று இச்சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகளில் இந்த சட்டத்தின்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்தும். இது தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தும் பயனில்லை.
 
தொடக்கத்தில் சில ஆண்டுகள் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இந்தச் சட்டத்தை மதிக்காமல், 25% இட ஒதுக்கீட்டை வழங்க மறுத்து வந்தன. ஒரு கட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், நீதிமன்றங்களும் அளித்த நெருக்கடி காரணமாக ஒரு சில இடங்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்பிய தனியார் பள்ளிகள், மீதமுள்ள இடங்களை பணக்கார மாணவர்களை ஏழைகளாகக் காட்டி நிரப்பிக் கொண்டன. 
 
இதற்காக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் ஒரு கட்டணம், அரசாங்கத்திடம் ஒரு கட்டணம் என வசூலித்து கல்விக் கொள்ளையில் பள்ளிகள் ஈடுபட்டன. புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழை மாணவர்கள் ஒருவர் கூட சேர்க்கப்பட்டதில்லை. ஏழைகளை சேர்த்தால் பள்ளியின் கவுரவம் குறைந்து விடும் என்று கூறி 25% இடங்களை ஏழைகள் என்ற பெயரில் கோடீஸ்வரர்களைக் கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இச்சமூக அநீதிகளை அரசு வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி அவற்றுக்கு உடந்தையாகவும் உள்ளது.
 
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு நிலைமை மோசமடைந்திருக்கிறது. கடந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு வழங்கவில்லை எனக் கூறி நடப்பாண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி மாணவர்களை சேர்க்க முடியாது என பல தனியார் பள்ளிகள் வெளிப்படையாக அறிவித்து விட்டன. 
 
வேறு சில பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் போதிலும் வகுப்பறையில் ஏழை மாணவர்களுக்கு இடமில்லை. வேறு சில பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுகின்றனர். அவர்களிடம் வேற்றுமைக் காட்டக்கூடாது என கல்வி உரிமைச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள போதிலும், கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கிறது.
 
சென்னை போன்ற நகரங்களிலுள்ள சில தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசு செலுத்தவில்லை என்பதால், மற்ற மாணவர்கள் செலுத்தும் அதே அளவு கட்டணத்தை இவர்களும் செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் பள்ளியை விட்டு நீக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளன. 
 
கல்வி உரிமைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின்படி, 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட எந்த மாணவரையும் எட்டாம் வகுப்பு முடியும் வரை பள்ளியிலிருந்து நீக்கவோ அல்லது தேர்ச்சியளிக்காமல் முடக்கி வைக்கவோ முடியாது. ஆனாலும், இந்த சட்டப்பிரிவை பொருட்படுத்தாமல் ஏழைக் குடும்ப மாணவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டுள்ளன.
 
தனியார் பள்ளிகளில் பல்வேறு சட்ட மீறல்கள் நடக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் 25% இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்றும், சேர்த்த மாணவர்களை நீக்குவோம் என்றும் சவால் விடுக்கும் துணிச்சல் தனியார் பள்ளிகளுக்கு எங்கிருந்து வந்தது? தனியார் பள்ளிகளின் விதிமீறலை அரசு கண்டு கொள்ளாததும், ஊக்குவிப்பதும் தான் இதற்கு காரணமாகும். இனியும் இந்த நிலை நீடித்தால் தனியார் கல்வி நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை ஏற்பட்டு விடும். இப்போக்கை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது.
 
எனவே, அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழை மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுவதையும், கடந்த ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயில்வதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக கடந்த 6 ஆண்டுகளில் கல்வி உரிமைச் சட்டப்படி நடந்த மாணவர் சேர்க்கை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.