’விவாகரத்து வழக்கு முடியும் வரை ஜீவனாம்சத்தை நிறுத்தக்கூடாது’ : உயர்நீதிமன்றம்
விவாகரத்து வழக்கில் இறுதி முடிவு வரும் வரை ஜீவனாம்சம் வழங்குவதை நிறுத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மரிய லாரன்ஸ். இவரது மனைவி மேரி பேபி. இருவரும் 1989 முதல் பிரிந்து வாழ்கின்றனர். மேரிக்கு மாதம் ரூ.350, அவரது மகளுக்கு மாதம் ரூ.150 ஜீவனாம்சம் வழங்க இரணியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மேரியும், அவரது மகளும் ஜீவனாம்சம் பெற்று வந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு 2009இல் விவாகரத்து வழங்கப்பட்டது. அப்போது மேரிக்கு மொத்தமாக ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மேரிக்கு மாதம் தோறும் ஜீவனாம்சம் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி இரணியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மரிய லாரன்ஸ் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்று மாத ஜீவனாம்சம் வழங்கும் உத்தரவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
இதை ரத்து செய்யக்கோரி மேரி பேபி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி பி.தேவதாஸ் ”உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து இன்னும் இறுதி பெறவில்லை. விவாகரத்தை மனுதாரரும் ஏற்கவில்லை.
விவாகரத்து வழங்கி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டதும் ஜீவனாம்சம் உத்தரவை நீதித்துறை நடுவர் ரத்து செய்ய முடியாது. இதனால் இரணியல் நீதித்துறை நடுவரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.