1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (15:40 IST)

விஜயகாந்த் துணை முதல்வர் பதவி கேட்டாரா? - மு.க.ஸ்டாலின் பதில்

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.
 

 
பின்னர், நமக்கு நாமே பயணத் திட்டத்தின்படி, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து உரையாடினார். அவர்களிடம் கோரிக்கை அடங்கிய மனுவை பெற்றுக் கொண்டார்.
 
இந்நிலையில், கடந்த மாதம் 6ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில், 3 கட்டமாக சுற்றுப்பயணத்தை தொடர்ந்த ஸ்டாலின், இன்று நிறைவாக 234 கடைசி தொகுதியாக தியாகராயர் நகர் சென்றார். அங்கு வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.
 
பின்னர், ஸ்டாலின் இதுவரை 12ஆயிரம் கிலோமீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், 1 லட்சம் மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் :
 
234 தொகுதிகளிலும் நமக்கு நாமே பயணம் மூலம் மக்களை சந்தித்து வந்துள்ளீர்கள்! மக்கள் மனதில் காணப்படும் பிரதான எண்ணம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
 
234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். ஜெயலலிதா ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் மக்கள் மனதில் காணமுடிகிறது.
 
பல்வேறு தொகுதிகளில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராகவே மக்கள் நினைக்கிறார்களே?
 
நீங்கள் நினைப்பது நிறைவேறட்டும்.
 
நமக்கு நாமே பயணத்தை பலர் கேலியும், கிண்டலும் செய்தார்களே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
 
இந்த பயணத்தை பல தலைவர்கள் விமர்சித்தார்கள். அதை நான் ஊக்கமாகவே பார்க்கிறேன்.
 
நமக்கு நாமே பயணத்தின் வெற்றி தேர்தலில் பிரதிபலிக்குமா?
 
கண்டிப்பாக தேர்தல் சமயத்தில் பிரதிபலிக்கும்.
 
திமுக கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் பதவி வேண்டும் என்று விஜயகாந்த் கேட்பதாக சொல்லப்படுகிறதே?
 
நீங்களாகவே யூகித்துக் கொண்டு கேட்கும் கேள்விகளுக்கும் எல்லாம் பதில் சொல்ல முடியாது. அப்படி யார் சொன்னது? விஜயகாந்த் சொன்னாரா?