Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

’பெண்ணை வெறும் பாலியல் உறுப்பாக பார்ப்பதா?’ - பாஜகவுக்கு சவுக்கடி கொடுத்த ஜோதிமணி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 2 ஜனவரி 2017 (21:09 IST)
தமிழக காங்கிரஸ் இயக்கத்தில் குறிப்பிடத்தகுந்தவரான ஜோதிமணி எதிராக சிலர் ஒன்றிணைந்து ஆபாச வாட்ஸ் அப் குழு ஒன்றைத் தொடங்கி, அவர் குறித்த வக்கிரக் கருத்துகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

 

அதற்கு பதலடியாக அவர், ஒரு திறந்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அது பின்வருமாறு:

இது தான் காவிகள்..!
இது தான் மதவெறியர்களின்
பாரத பண்பாடு..?!

மதிப்பிற்குரிய நரேந்திர மோடி, பிஜேபியின் தலைவர் அமித் ஷா, தமிழக பிஜேபியின் தலைவர் சகோதரி தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர்களுக்கு

வணக்கம்.

நேற்று முதல் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் உங்கள் ட்ரோல் படை (ஆபாசமாக ,பாலியல் ரீதியாக, கொச்சையாக அவதூறு செய்தல்) என்னிடம் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்களை கீழே கொடுத்துள்ளேன்.

பிஜேபியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தங்கள் சித்தாந்தத்தோடு முரண்படுபவர்கள் மாற்றுக்கருத்து உள்ளவர்கள், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை எனும் மகத்தான அடையாளத்தை தாங்கிப்பிடிப்பவர்களுக்கு எதிராக எப்படி ஆபாச ஆயுதங்களை ஏவுதல், கொலை, அமில வீச்சு, பாலியல் வன்புணர்வு மிரட்டல் ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்கிறார்கள் என்று பிஜேபியின் முன்னாள் தொண்டரான சாத்வி கோஸ்லா அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டி இந்திய, உலக ஊடகங்களில் வெளிவந்து இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.

எனக்கு( பொதுவாழ்வில் போர்குணத்தோடு ஈடுபடும் பல பெண்களுக்கும், ஆண்களுக்கும்) உங்கள் படையிடமிருந்து ஆபாச அவதூறுகள், அச்சுறுத்தல்கள் வருவது தொடர்ந்து நடப்பதுதான்.வழக்கமாக அதை நாங்கள் கடந்து போய்விடுவோம். இம்முறை அதை பொதுவெளியில் எதிர்கொள்வது என்று நான் முடிவு செய்ததற்குக் காரணம் ஒரு பெண்ணாக என்னை அவதூறு செய்து முடக்கிவிட முடியும் என்று நம்பும் உங்கள் ஆதி சித்தாந்தம் பாரதி சொன்னதுபோல ”நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்ட” என்போன்ற பெண்களிடம் எடுபடாது என்று சொல்லத்தான் நான் இருபது ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருக்கிறேன்.

கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற இயற்கைச் சீற்ற நிவாரணப்பணிகள் உட்பட ஏரளமான களப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். 22 வயதில் தமிழகத்தின் இளைய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படிருக்கிறேன். அந்த பத்தாண்டுகளில் சாதிய ஒடுக்குமுறையால் குடிதண்னீர்கூட கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி அவர்கள் உரிமைகளை உறுதிசெய்திருக்கிறேன். அமராவதி ஆற்றில் மணல்கொள்ளையைத் தடுத்து நிறுத்தியிருக்கிறேன்,

ஒரு குக்கிராமத்தில் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாத சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து (இன்னும் அங்குதான் வசிக்கிறேன்) அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் பொதுசெயலாளராக எட்டு மாநிலங்களில் பணியாற்றியிருக்கிறேன்.

நான் ஒரு எழுத்தாளர். சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருதை எழுத வந்த மூன்றே ஆண்டுகளில் பெற்றிருக்கிறேன், மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக பொதுவாழ்வில் நேர்மை,எளிமை துணிவிற்காகவே இன்றுவரை அறியப்படுகிறேன். என் கருத்துக்களோடு நீங்கள் முரண்பட்டால் அதை கருத்து ரீதியாக எதிர்கொள்ளும் உங்கள் உரிமையை மதிக்கிறேன். நான் பின்பற்றுகிற சித்தாந்தம் எனக்கு அன்பையும், சகிப்புத் தன்மையையுமே போதித்திருக்கிறது. இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு ஒரு பெண்ணாக அதிலும் வெறும் பாலியல் உறுப்பாக மட்டுமே பார்க்கமுடிகிறது என்றால் உங்கள் சித்தாந்தத்தை என்னவென்று சொல்வது?!

என்னை அவதூறு செய்பவர்களுக்கும் அறிவு, சிந்தனை இருக்ககூடும். ஆனால் உங்கள் சித்தாந்தத்தின மூளைச்சலவை அவர்களையும் தங்களைத் தாங்களே வெறும் பாலியல் உறுப்பாக மட்டும் உணர வைத்துவிட்டது எவ்வளவு பெரிய துயரம்!

இதில் நான் அவமானப்படவோ, வெட்கப்படவோ, கூனிக்குறுகவோ குறைந்தபட்சம் சிறிதும் மனசஞ்சலம் அடையவோ எதுவும் இல்லை. என்னிடம் இப்படி நடந்துகொள்பவர்கள்தான் அவமானப்பட வேண்டும், வெட்கப்பட வேண்டும், அவர்கள் செய்த காரியத்திற்காக கூனிக்குறுக வேண்டும்

கடந்த இருபத்தி நான்கு மணிநேரத்தில் எனது அலைபேசியில் குறைந்த பட்சம் 500 அழைப்புகள் வந்திருக்கும், இன்னும் வந்துகொண்டிருக்கிறது, அதற்கெல்லாம் பயந்து நான் அலைபேசியை அணைத்து வைக்கமாட்டேன்.

உலகெங்கிலும் உங்கள் நெட்வொர்க் எவ்வளவு பெரியது எவ்வளவு பெரிய மனவியாதியால் அது பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதை உலகின் பல நாடுகளிலும் இருந்து ஓயாமல் வரும் அழைப்புகள் உணர்த்துகின்றன, ஆனால் நான் பயந்து ஓடமாட்டேன்.அவர்கள் களைத்துப் போகும்வரை அழைத்துக்கொண்டேயிருக்கிற வாய்ப்பை வழங்குவேன்.

அவர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும், வெறுப்பும் இல்லை. இப்படியொரு மனோ வியாதி அவர்களை பீடித்திருக்கிறதே, இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய இளைஞர்களை ஒரு அரசியல் கட்சி, அதுவும் இந்தியாவை ஆளுகிற கட்சி இவ்வளவு கேவலமான காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபடுத்தி, சகிப்புத் தன்மையற்ற மனநோயாளிகளாக மாற்றிவிட்டதே என்று வருத்தப்படுகிறேன்.

நீங்கள் என்போன்றவர்களுக்குத் தீங்கு செய்வது அப்புறம் முதலில் உங்களுக்கு நீங்களே தீங்கு செய்துகொள்ளும் ஆபத்திலிருந்து மீண்டு வாருங்கள்.அன்பையும், சகிப்புத் தன்மையையும் புரிந்துகொள்ளுங்கள். உலகம் எவ்வளவு அழகானது என்று உங்களுக்குப் புரியும்.

#மக்களுக்கு ஒரு வேண்டுகோள்
என்போன்ற பொதுவெளியில் செயல்படும், தனது கருத்துக்களை பதிவுசெய்யும் உரிமையை கைக்கொள்ளும் பெண்களை இப்படி ஆபாசமாக அவதூறு செய்வது அச்சுறுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. பல பெண்கள் இதை எதிர்கொள்ள முடியாமல் முடங்கிப் போகிறார்கள்.

நாளையும் நமது சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் இது நடக்கும். அவர்களுக்காகவே இன்று இந்த அவதூறுகளை பொதுவெளியில் எதிர்கொள்ள முடிவுசெய்தேன். இது எனது தனிப்பட்ட போராட்டம் அல்ல, நமது சமூகத்திற்கான போராட்டம்.

நமது பெண்களை அவதூறுகளிலிருந்தும், நமது இளைஞர்களை இம்மாதிரியான மனநோயிலிருந்தும், அதற்கு காரணமான சித்தந்தத்திடமிருந்தும் மீட்பதற்கான போராட்டம், நீங்களும் இந்தப் போராட்டத்தில் இணையுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பகிரங்கமாக ஜோதிமணி வெளியிட்டிருந்த அறிக்கைக்கு ஆதரவாக, பலரும் இணையத்தளங்களில் எழுதி வருகின்றனர். மேலும், பாஜகவின் கலாச்சார தாக்குதல் குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :