திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (23:10 IST)

பொதுத்தேர்வை நடத்தி மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டாம் - டிடிவி. தினகரன்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வரும் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தேர்வை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமன்றி இன்று சென்னை உயர்நீதிமன்றமும் கருத்துக் கூறியது.

இது குறித்த வழக்கு இன்று நடைபெற்ற போது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் காரசாரமான கேள்விகளைக் கேட்டது என்பதும் அதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்றி அனைத்து மாணவர்களும் பாஸ் என்று அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இல்லை என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

இதே போன்று தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல் 10 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திட வேண்டும். தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்தியே தீருவது என பிடிவாதம் பிடிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நோயைக் கட்டுபடுத்த தவறு செய்ததைப் போல் இவ்வளவு ஆபத்திற்கிடையே பொதுத்தேர்வை நடத்தி மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டாமென தெரிவித்துள்ளார்.