வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2017 (17:23 IST)

ஆர்.கே.நகரில் மும்முனைப் போட்டி - சாதகமாக்கிக் கொள்ளுமா திமுக?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுதால், அதை திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் தீபா அணி, ஓ.பி.எஸ் அணி, தினகரன் அணி என அதிமுக 3 அணிகளாக பிரிந்து நிற்கிறது. அவர்கள் அனைவரும் நாங்களே ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெறுவோம். அந்த தொகுதி மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கையோடு கூறி வருகிறார்கள். 
 
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த வரும் ஏப்ரல் மாத நிலவரப்படி 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர். 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதாவது, சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, விடுதலை ஆகி, மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது, 1 லட்சத்து 60 ஆயிரத்து 432 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து நின்ற சிபிஐ வேட்பாளர் மகேந்திரன் வெறும் 9,710 வாக்குகள் மட்டுமே பெற்றார். 


 

 
ஆனால், 2016ம் ஆண்டு அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்ற போது, முதல்வர் வேட்பாளரான ஜெயலலிதா, 97,218 வாக்குகள் மட்டுமே பெற்றார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 57,673 வாக்குகள் பெற்றார். எனவே, 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஜெயலலிதா வெற்றி பெற்றார். எனவே, அப்போதே, ஜெ.விற்கு எதிரான ஓட்டுகள் திமுக வேட்பாளர் பக்கம் சென்றது.
 
இந்நிலையில் அங்கு தற்போது மீண்டும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜெ.வின் அரசியல் வாரிசு நாங்கள்தான் எனக்கூறி தீபா அணி, ஓ.பி.எஸ் அணி, தினகரன் அணி என அனைவரும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். எனவே, அதிமுகவிற்கான ஓட்டு வங்கி மூன்றாக பிரியும் எனத் தெரிகிறது. இது, எதிர்கட்சியான திமுகவிற்கு சாதகமாக அமையும் எனத் தெரிகிறது.
 
எனவே, வலிமையான வேட்பாளரை நிறுத்தி, இந்த இடைத் தேர்தலில் வெற்றியை பெற திமுகவும் முயற்சி செய்யும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.