வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (16:13 IST)

விளம்பர அரசியல் நடத்தும் திமுக.! பல்கலைக்கழகங்களின் நிதி இல்லை குறித்து இபிஎஸ் கண்டனம்.!

edapadi
ஆளுநரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அரசு நடத்தும் விளம்பர அரசியல் நாடகத்தால் துணைவேந்தர்களை நியமிக்காமலும், நிதி நிர்வாகம் செய்யத்தவறியும் மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழகத்தில் அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களில் 13-ல் 12 நிதிப் பற்றாக்குறையால் செயல்பட முடியாமல் திணறி வருவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியம், கட்டுமானப் பராமரிப்பு என அடிப்படை தேவைகளுக்கே நிதி இல்லாத அளவுக்கு தமிழகத்தின் பல்கலைக்கழகங்களைப் பாழ்படுத்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
 
திராவிட இயக்கத்தின் அடிப்படையான கல்வியின் உறைவிடங்களான பல்கலைக்கழகங்களையே நிர்வகிக்கத் திராணியற்ற மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியை “திராவிட மாடல்” என்று மார்தட்டிக்கொள்வது வெட்கக்கேடானது. ஆளுநரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அரசு நடத்தும் விளம்பர அரசியல் நாடகத்தால் துணைவேந்தர்களை நியமிக்காமலும், நிதி நிர்வாகம் செய்யத்தவறியும் மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 
உடனடியாக அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களின் நிதிநிலை குறித்து ஆராய்ந்து, உரிய நிதி ஒதுக்கி, மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.