1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 27 மே 2015 (15:32 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாது: கருணாநிதி அறிவிப்பு!

நீதித்துறையிலும், தேர்தல் ஆணையத்திலும் மிகப்பெரிய செல்வாக்கினைப் பெற்றிருப்பவர்கள் நடத்தும் ஆட்சியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் அது எப்படி இருக்கும் என்பதை அனைவரும் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி திமுக தலைவர் கருணாநிதி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளார்.


 

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, ஜுன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் 26-5-2015 அன்று அறிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று நடைபெறுகிறதா என அனைவரும் கேட்டு வந்தார்கள் அல்லவா? அதனால் தற்போது ஜெயலலிதாவுக்கான காரியங்களை நிறைவேற்றுவதற்காக நாடகம் ஒன்றை நடத்துவதைப் போல, ஆட்சி மிக வேகமாக இயங்குவதாகக் காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.
 
"கின்னஸ்"  புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்கு 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கிலே கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து, சிறையிலே அடைத்ததும், அவருடைய ஜாமீன் வழக்கு, மேல் முறையீடு வழக்கு எல்லாம் மின்னல் வேகத்தில் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் தொடர்ச்சியாக நடைபெற்று முடிந்துவிட்டன.
 
எப்படியோ ஜெயலலிதா முதலமைச்சராகி விட்டாலும், சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை என்பதால், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை ராஜினாமா செய்யச் சொல்லி, அந்த ராஜினாமாவின் தொடர்ச்சியாக இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
27-9-2014 அன்று ஜெயலலிதா தண்டனைக்காளாகி, திருவரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்த போது, தேர்தல் ஆணையம் 12-1-2015 அன்று தான் தேர்தல் அறிவிப்பினை செய்தது. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 17ஆம் தேதி தான் வேட்பாளர் ராஜினாமா செய்கிறார். பத்தே நாட்களில் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
 
நீதித்துறையிலும், தேர்தல் ஆணையத்திலும் மிகப்பெரிய செல்வாக்கினைப் பெற்றிருப்பவர்கள் நடத்தும் ஆட்சியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் அது எப்படி இருக்கும் என்பதை அனைவரும் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். 2014இல் இவர்கள் ஆட்சியில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலையே நேரில் பார்த்தவர்கள் தானே நாம்! திருவரங்கம் இடைத்தேர்தல் நேரத்தில் பணம் எப்படியெல்லாம் திருவிளையாடல் செய்தது என்பது நமக்குத் தெரியாதா? காவல்துறையினர் எந்த அளவுக்கு நியாயமாகவும், நேர்மையாகவும் அந்தத் தேர்தல்களில் நடந்து கொண்டார்கள் என்பதை நாம் பார்க்கவில்லையா?
 
எனவே இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் எந்த அளவுக்கு மதித்துப் போற்றப்படும் என்று நமக்குத் தெளிவாகத் தெரிகின்ற நிலையில், சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் ஓராண்டுக்குள் நடைபெறவுள்ள சூழ்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்து விடுவதே நல்லது என்பதால், ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
 
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.