1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (20:19 IST)

’ஸ்ரீரங்கத்தில் 600 வாக்குகள்தான் திமுகவுக்கு கிடைத்துள்ளது’ - நத்தம் விஸ்வநாதன்

ஸ்ரீரங்கத்தில் 600 வாக்குகள்தான் திமுகவுக்கு கிடைத்துள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
 
அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, செந்தில் பாலாஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
அப்போது கூட்டத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், “திமுகவும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தியுள்ளது. இதில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாங்கியதை விட 600 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதாக ஸ்டாலின் கூறி உள்ளார்.
 
ஸ்ரீரங்கம் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் இருந்ததை விட கூடுதலாக தற்போது 10 ஆயிரம் வாக்குகள் உள்ளது. 10 ஆயிரம் வாக்குகளில் 600 வாக்குகள்தான் திமுகவுக்கு கிடைத்துள்ளது.
 
சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்சனை பற்றி பேசுவது இல்லை. ஏதாவது காரணத்தை கூறி வெளிநடப்பு செய்கிறார்கள். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட எதுவும் நடைபெறவில்லை என்று மு.க.ஸ்டாலின் வெளியில் வந்து கூறுகிறார்.
 
அதை சட்டமன்றத்தில் சொல்ல வேண்டியது தானே. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக ஸ்டாலின் தவறாக கூறுகிறார். இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதி பூங்காவாக உள்ளது. தி.மு.க.வை மக்கள் ஒரு போதும் இனி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 
முதலமைச்சர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பது போல நான் தான் முதல்வர் என்று விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பேசி வருகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் போட்டியிட கூட தைரியம் இல்லாதவர்கள் எப்படி முதல்-அமைச்சராக முடியும்.
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இன்னல் நிரந்தரம் இல்லை. விரைவில் மீண்டும் அவர் முதல்வராவார்” என்று கூறியுள்ளார்.