புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (10:44 IST)

நீங்க மட்டும் முதல்வராக ஆசைப்படலாமா? –ரஜினியைக் கலாய்த்த முரசொலி

ரஜினியின் அரசியல் வருகை மற்றும் ரசிகர்களுக்கு அவர் கூறிய அறிவுரைகளை கேலி செய்து முரசொலி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது

ரஜினி நீண்டகால அலைக்கழிப்புகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். அதன் பின் ரஜினி ரசிகர் மன்றங்கள் தூசு தட்டப்பட்டு புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்தனர். மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் கட்சியை ஆரம்பிப்பார் என எதிர்பார்த்த ரஜினி வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். நாட்டில் நிலவும் பல்வேறு அசாதாரண சூழ்நிலைகள் குறித்தும் தனது கருத்தைப் பதிவு செய்யாமல் மழுப்பலான பதில்களையேக் கூறி வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் சுணக்கத்தை ஏற்பதுத்தியுள்ளது.

அதேப்போல ரஜினியின் ரசிகர் மன்றங்களிலும் கடந்த சில மாதங்களாக சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மன்றத்தின் உயர் பொறுப்புகளில் இத்தனை வருடமாக ரஜினியின் ரசிகர்களாக இருந்து மன்றத்திற்காக உழைத்தவர்களை அமர்த்தாமல் புது நபர்களை பொறுப்பில் அமர்த்துவதால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த மாற்றங்கள் ஒழுங்கு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதாகவும் ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் இது ரஜினியின் அனுமதியின்றி எடுக்கப்படும் நடவடிக்கைகள் என குற்றம் சாட்டினர்.

இதையடுத்து ரஜினி தனது ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் ’ஒழுங்கு நடவடிக்கைகள் எனது ஒப்புதலோடுதான் எடுக்கப்படுகின்றன. நான் அரசியலுக்குவந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்றஎண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள்இப்போதே விலகி விடுங்கள். மேலும் இத்தனை வருடங்கள் மன்றத்திற்காக உழைத்ததினால் மட்டுமே ஒருவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.’ என கூறியிருந்தார்.

இதையடுத்து திமுக வின் அதிகாரப்பத்திரிக்கையான முரசொலி இன்று ரஜினியிடம் தனது ரசிகர் ஒருவர் கேள்வி கேட்பது போல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘மன்றத்திற்காக இத்தனை வருடங்கள் உழைத்த தங்களின் உண்மையான ரசிகர்கள் நியாயமானப் பதவிக்கு ஆசைப்படுவதில் என்ன தவறு? தாங்கள் மட்டும் இத்தனை வருடங்கள் சினிமாவில் நடித்ததால் மட்டுமே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா?. பதவிக்காக அரசியல் இல்லை எனில் பெரியார் போல கொள்கைக்காக கட்சி ஆரம்பித்து இயக்கமாக செயல்பட்வேண்டியதுதானே?’ எனபது போல செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை ரஜினியை நேரடியாக விமர்சிக்காத திமுக தற்போது ரஜினியை விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.