வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (06:20 IST)

ஐ.நா. அலுவல் மொழியாக ஹிந்தி: சுஷ்மா ஸ்வராஜ் முயற்சிக்கு கருணாநிதி கண்டனம்

இந்தியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக அறிவிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது, பாரபட்சமான செயல் என்றும், அநீதியான செயல் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மத்தியில் எந்த அரசு அமைந்தாலும், அவர்களுக்கு “இந்தி” மோகம் என்பது அவர்களையும் அறியாமல் வரும் போலும். நம்மிடம் பேசும்போதும், பழகும் போதும் அவர்கள் அதை மறுத்த போதிலும், “இந்தித் திணிப்பு” என்பது இருந்து கொண்டு தான் வருகிறது.
 
பாஜக அரசைப் பொறுத்தவரையில், இது பற்றி நாம் சுட்டிக் காட்டிய போதெல்லாம் உடனே அதனைத் திருத்திக் கொண்டு அறிவிக்கிறார்கள் என்ற போதிலும், மீண்டும் இன்னொரு பக்கத்தில் அந்த “இந்தித் திணிப்பு” என்பது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
 
வளர்ச்சி, நல்லாட்சி என்ற முழக்கங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி அமைச்சரவையில் இடம் பெற்ற சிலர், தங்கள் நோக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்குத் தேவையற்ற முக்கியத்துவத்தைத் தந்து, மொழி மற்றும் கலாசாரத் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
குறிப்பாக, மத்திய அரசின் அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ், அண்மையில்தான் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு, நாடாளுமன்றமே பல நாட்கள் நடக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். அந்தப் பிரச்சினைமுழுவதும் முடிவதற்குள்ளாகவே, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழியை அறிவிப்பதற்காக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டப் போவதாக அவர் தற்போது தெரிவித்திருக்கிறார்.
 
ஐ.நா. சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக, இந்தியை அறிவிக்க, 129 நாடுகளின் ஆதரவு தேவை. அந்த 129 நாடுகளின் ஆதரவைத் திரட்ட, இந்தியா முயற்சித்து வருவதாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
 
ஐ.நா. வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை அறிவித்தால் அதற்காகச் செலவாகும் சுமார் ரூ.270 கோடியை இந்திய அரசு ஏற்கத் தயாராக இருப்பதாகவும்; இதில் செலவு ஒரு பொருட்டே அல்ல என்றும் சுஷ்மா அறிவித்திருக்கிறார்.
 
மேலும், அவர், “ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் ஐ.நா. அலுவல் மொழியாக இந்தியை அறிவிப்பது எளிதாகிவிடும்” (”And we are now trying for permanent membership in the UN Security Council. We feel after we get permanent membership, the work of getting Hindi included in the UN will become easier, she said.) என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருப்பது, வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
 
மத்திய அரசு இனியாகிலும் இப்படிப்பட்ட போக்கினைத் தொடராமல் இருக்க அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் உரிய எச்சரிக்கையை பிரதமரே செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
 
ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனதார வரவேற்கிறேன். நீண்ட பல ஆண்டுகளாக நடந்துவரும் அந்த முயற்சியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
 
ஆனால், இந்தியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக அறிவிப்பதை ஏற்க மறுக்கிறேன்; வன்மையாகக் கண்டிக்கிறேன். இது, பாரபட்சமான செயல்; அநீதியான செயல். இந்தியாவின் பன்மைத் தன்மையை, வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்ற தனித்துவத்தை அழித்துவிடும் ஆபத்து இதில் இருக்கிறது.
 
பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்களைக் கொண்ட மக்கள் வாழும் நம் நாட்டில், அனைத்து மொழிகளும் சமமாகக் கருதப்பட வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு வழங்கப்படவேண்டும். அப்போதுதான் நாட்டின் கூட்டாட்சி வலுப்பெறும்.
 
தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளையும் மத்தியில் ஆட்சிமொழிகளாக அறிவிக்க வேண்டும் என்ற நமது அரை நூற்றாண்டு காலக் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வரும் மத்திய அரசு, இந்திக்கு மட்டும் வக்காலத்து வாங்குவது நீதியா?
 

ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியே இந்தியாவின் அடையாளம் என்று சித்தரிப்பது வேண்டாத வேலை அல்லவா? இந்தி பேசாத பெரும்பான்மை மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கிவிட்டு, அவர்களது தாய்மொழியை உதாசீனப்படுத்திவிட்டு, இந்திக்கு மட்டும் மகுடம் சூட்டுவதை, தமிழ் மக்களும் ஏனைய பகுதிகளில் வாழும் இந்தி பேசாத மக்களும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
 
இந்தியின் உயர்வுக்காகச் செலவிடுவது ஒரு பொருட்டல்ல என்று தாராளம் காட்டும் இதே அரசுதான், ஏழைகள் பயன்பெறும் மக்கள் நலத் திட்டங்களுக்கான மானியங்களை மனிதாபிமானமின்றி குறைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியின் அங்கீகாரத்துக்காக செலவிடப்படும் தொகை மக்களின் வரிப்பணம் அல்லவா? அந்தப் பணத்தைச் செலுத்துவோரில் பெரும்பான்மையோர் இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் அல்லவா?
 
பாஜக அரசு மத்தியில் அமைந்ததற்குப் பிறகு இந்தி மொழித் திணிப்பு நடவடிக்கைகளில் திடீர் வேகம் காட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழி அகற்றப்பட்டு, சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது. சமஸ்கிருத வாரம், இந்தி வாரங்கள் தாராளமாகக் கொண்டாடப்படுகின்றன. வழக்கொழிந்துபோன சமஸ்கிருத மொழியில் சிறப்புச் செய்திகள் வாசிக்க அரசு நிறுவனமான தூர்தர்ஷனில் அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.
 
மத்திய அரசின் முழு உதவியோடு வரும் செப்டம்பர் 10 மற்றும் 12 தேதிகளில் போபாலில் உலக இந்தி மாநாடு நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருக்கும் “இந்தி” பற்றிய கருத்து, தேவையற்ற கருத்து என்று தெரிவிப்பதோடு, மத்திய அரசு இனியும் இது போன்ற ட்ட போக்கினைத் தொடராமல் இருக்க அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் உரிய எச்சரிக்கையை பிரதமரே செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
 
இந்தியை எதிர்ப்பதில் திமுக கடந்த காலம் முதல் கடும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடதக்கது.