வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 21 மார்ச் 2016 (16:14 IST)

திமுக காங்கிரஸின் ‘பி’ டீம்; அதிமுக பாஜகவின் ‘பி டீம் - ரங்கராஜன் தாக்கு

திமுக காங்கிரஸின் ‘பி’ டீம் என்றும் பாஜகவின் பி டீம் அதிமுக என்றும் இன்றைக்குத் தமிழக அரசியலில் நாங்கள் ஏ டீம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டினார்.


 
மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டி.கே.ரங்கராஜன், ”மக்கள் நலக்கூட்டணி தொடரக்கூடாது என தமிழ்நாட்டில் பல்வேறு கட்சியினர் இரவு பகலாக தாங்கள் விரும்பும் தெய்வத்தை வேண்டிக் கொண்டிருக்கின்றனர். தெய்வம் அவர்களை ஏமாற்றிவிடும்.
 
மக்கள் முன் உள்ள பிரச்சனைகள், கிராமப்புற விவசாயிகளின் பிரச்சனைகள், சிறுதொழில்களில் ஏற்பட்டுள்ள நலிவு, வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இத் தேர்தலில் முக்கிய காரணியாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு விடை காணும் சக்தி மக்கள் நலக்கூட்டணிக்கு மட்டும் தான் உண்டு.
 
இப்பிரச்சனைகளைப் பற்றி கலைஞர் பேசுவதில்லை. கலைஞருக்கு ஜெயலலிதாவை விமர்சிப்பதில் உள்ள நாட்டம் வேறு எதிலும் இல்லை. இந்நிலையில் எங்களைப்பார்த்து பி டீம் என்கிறார்கள். காங்கிரசின் பி டீமாக திமுக இருக்கிற போது மற்றவர்களெல்லாம் பி டீமாகத் தான் தெரிவார்கள்.
 
பாஜகவின் பி டீம் அதிமுக. இன்றைக்குத் தமிழக அரசியலில் நாங்கள் ஏ டீம். வைகோ, முத்தரசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் அதன் தலைவர்கள். மத்திய பட்ஜெட் ஒரு பகுதியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக்கொண்டுள்ளது. இன்னொரு பகுதி அதை விமர்சித்துக் கொண்டே இருக்கிறது.
 
பத்திரிகைகளும் விமர்சனம் செய்கின்றன. பட்ஜெட்டின் முதல் பாராவிலேயே அருண்ஜெட்லி சொல்கிறார்: “அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்பட உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் எழுந்து நின்று கொண்டிருக்கிறது” - இது கேழ்வரகில் நெய் வடிகிறது என்பதைப் போல் உள்ளது.
 
நமது நாட்டின் ஏற்றுமதியை இன்றைய சூழலில் வெளிநாட்டில் எவன் வாங்குவான் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. இறக்குமதி அதிகரித்திருக்கிறது. விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் விற்கவில்லை என்றால் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை என்று அர்த்தம்.
 
1 ரூபாய்க்கு இட்லி அரசு வழங்குகிறது என்றால் அதற்கு மேல் செலவழித்து உண்ண சக்தி இல்லை என்று தானே அர்த்தம். கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது.
 
சாராயத்தைக் குடிக்க வைத்து இட்லி, மின்விசிறி கொடுக்கிறார்கள். இந்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. கடன்படுவதில் தவறில்லை. வளர்ச்சிக்கு மாறாக அழிவு வந்தால் மக்கள் தலையிலேதான் விழும்” என்று கூறியுள்ளார்.