ரஜினி வரட்டும்...தயாராக இருக்கிறோம் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்கொள்ள தேமுதிக தயாராக இருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி ஊடகங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என திருமாவளவன், தமிழருவி மணியன் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், சீமான், சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த் “எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும். ஆனால், அவர் தாய் மொழி தமிழ் இல்லை, அவர் கன்னடர் எனவும் விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தை ஆண்ட எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு தாய் மொழி தமிழ் கிடையாது. ஏன்? கருணாநிதியின் உண்மையான தாய் மொழி என்ன என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது. எனவே, மொழி மட்டுமே முதல்வருக்கான அடையாளமாக கருத முடியாது.
அதேபோல், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்தவர் கேப்டன். எனவே, ரஜினிகாந்தையும் எதிர்கொள்வோம். யார் மீதும் எங்களுக்கு பயமில்லை” என அவர் கூறினார்.