வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (10:12 IST)

கிசான் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு - நீதி கேட்டும் கேப்டன்!!

கிசான் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு மீது நடவடிக்கை கோரி தேமுதிக விஜய்காந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
மத்திய அரசால் விவசாயிகளுக்கு நிதியுதவியாக மாதம் தோறும் 6 ஆயிரம் வழங்கப்படும் பிரதம மந்திரியின் கிசான் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல லட்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து தேமுதிக விஜய்காந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமரின் வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் அல்லாத பல்லாயிரம் பேர் போலி ஆவணங்கள் மூலம் நிதி உதவி பெற்று மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 
 
மழை, வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர்களால் மட்டுமல்லாமல், விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில், நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் வழங்கும் வகையில் அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 
 
ஆனால், இந்த திட்டத்திலும் இடையில் உள்ளவர்களின் மோசடி காரணமாக விவசாயிகளுக்கு உரிய பணம் கிடைக்க பெறுவதில்லை. அரசால் வழங்கப்படும் பேரிடர் கால நிவாரண நிதியும் முறையாக அவர்களை சென்றடைவதில்லை. 
 
எனவே, மத்திய-மாநில அரசுகள் உடனடியாக குழு ஒன்றை அமைத்து மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து மோசடி செய்த பணத்தை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு கிடைத்திட ஆவண செய்வதுடன், மோசடியில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.