பாஜகவுடன் தேமுதிக கூட்டணி ? – அறிவித்தார் எல்.கே. சுதிஷ்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் பாஜக தலைவர் அமித் ஷாவோடு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக் தேமுதிக துணை செயலாளர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்துள்ளன. மறுபக்கம் அதிமுக, பாஜக மற்றும் பாமக இணைந்த ஒரு கூட்டணி உருவாவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந்தக் கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக வையும் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
2011- 2016 ஆட்சிக்காலத்தில் பிரதான எதிர்க்கட்சி, தமிழக வாக்காளர்களில் 10 சதவீதம் பேரைக் கைவசம் வைத்திருந்தது, கூட்டணிக்காக திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளும் காத்திருந்தது போன்றவை தேமுதிக கடந்த காலங்களில் செய்த சில அசைக்க முடியாத சாதனைகளாகும். ஆனால் அவை எல்லாமே இப்போது கடந்த காலமாக மாறிவிட்டன.
2016 சட்டமன்றத் தேர்தலில் 100 இடங்களுக்கு மேல் போட்டியிட்டும் ஒருத் தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாதது, கட்சித் தலைவர் விஜயகாந்தின் உடல்நலக் குறைவு, கட்சி அதிகாரங்கள் அனைத்து விஜயகாந்திடம் இருந்து அவரது மனைவி மற்றும் மைத்துனரிடம் கைமாறியது என தேமுதிக வில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் தேமுதிக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோர்வடைந்து உள்ளனர்.
கட்சியையும் தொண்டர்களையும் மீண்டும் உற்சாகமாக்க வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பொன்னான வாய்ப்பு. ஆனால் தேமுதிக சார்பில் இதுவரைக் கூட்டணி குறித்தோ தேர்தல் வியுகங்கள் குறித்தோ எந்த விவரமும் வெளியாகவில்லை. இதையடுத்து இப்போது முதல் முறையாக தேமுதிக வின் துணை செயலாளரும் தேர்தல் குழு தலைவருமான எல்.கே. சுதீஷ் கூட்டனி குறித்து அறிவித்துள்ளார். அதில் ‘2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வோடு இணைந்து தேர்தலை சந்தித்தோம். அப்போதிலிருந்தே அமித் ஷா எங்களோடு நெருக்கமான உறவில் உள்ளார். அவரோடுக் கூட்டணிக் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.; எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சித் தலைவரின் உடல்நிலைக் குறித்து கூறுகையில் ‘தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார். பிப்ரவரி மாத இறுதியில் அவர் தமிழ்நாடு திரும்புகிறார். அதன் பின் கூட்டணி உறுதி செய்து அறிவிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.