வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2018 (09:44 IST)

பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ: ஹெச்.ராஜா-வை வெளுத்து வாங்கிய பாரதிராஜா!!

பிரபல திரைப்பட கவிஞர் வைரமுத்து தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள் என இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆகியவை குறித்து அவர் விளக்கிய விதம் ஒருசிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இது குறித்து ஹெச்.ராஜா பின்வருமாறு விமர்சனம் செய்தார், இந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்துவது என்பது வைரமுத்து போன்றவர்களுக்கு வாடிக்கை. இதற்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. 
 
இவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியது விஷமத்தனமானது. ஒரு அநாகரீகமான நபருக்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என கூறியிருந்தார். 
 
இதற்கு வைரமுத்து தனது பதிலை கூறிவிட்டு அமைதி காத்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இயக்குனர் பாரதிராஜா, ஹெச்.ராஜாவிற்கு கடும் கண்டனத்தை அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார். அது பின்வருமாறு....
 
எங்கள் வம்சாவழி,
எங்கள் உணர்ச்சிகளின், வடிகாலே ஆயுதங்கள்தான்.
காலமாற்றமும், விழிப்புணர்வும்தான்
எங்களை ஆயுதக் கலாசாரத்திலிருந்து மாற்றிவைத்தது.
கவிப்பேரரசு வைரமுத்துவை நீ பேசவில்லை.
எங்கள் தாய்வழி சகோதர, சகோதரிகளை,
எங்கள் தொப்புள் கொடி உறவுகளைக் கொச்சைப்படுத்தி விட்டாய்.
உன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது.
தமிழ் உணர்வுகளைச் சிதைத்தது.
நீ, தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டாய்.
பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ.
நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமேயொழிய
தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும்
இழக்கவில்லை.
எச்சரிக்கை!
மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்துக்கு ஆளாக்கி விடாதே!
இப்படித் தவறாகப் பேசும் பராரிக்கு உடனிருக்கும் நல்ல தமிழ்த் தலைவர்கள்
பாடம் புகட்டக் கடமைப்பட்டவர்கள் என்பதை இந்த அறிக்கையின் மூலமாகப் பதிவு செய்கிறேன் என கண்டனம் விடுத்துள்ளார். இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.