1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (09:26 IST)

தினகரனுக்காக தீக்குளிக்க முயன்ற தொண்டர்: டெல்லி போலீஸ் வருகையால் பதற்றம்!

தினகரனுக்காக தீக்குளிக்க முயன்ற தொண்டர்: டெல்லி போலீஸ் வருகையால் பதற்றம்!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து நேற்று சென்னை வந்த டெல்லி போலீசார் டிடிவி தினகரனிடம் விசாரணைக்கு ஆஜராக சம்மனை நேரில் கொடுத்தனர்.


 
 
சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை சில தினங்களுக்கு முன்னர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டெல்லி நட்சத்திர விடுதி ஒன்றில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது காரில் இருந்து சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.
 
இதனையடுத்து சுகேஷை காவலில் எடுத்து விசாரித்ததில் அவரிடம் டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் பேரம் பேசி இரட்டை சிலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து சுகேஷும், டிடிவி தினகரனும் இது தொடர்பாக தொலைப்பேசியில் பேசிக்கொண்ட ஆடியோ உரையாடல் டெல்லி போலிஸ் வசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து தினகரன் மீது பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அளிக்க டெல்லி போலீசார் நேற்று சென்னைக்கு வந்தனர். ஏசிபி சஞ்சய் ராவத் தலைமையிலான டெல்லி போலீசார் அடையாறில் உள்ள தினகரன் இல்லத்துக்கு சென்று சம்மனை நேரில் வழங்கி விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தினர்.
 
இதனால் தினகரன் வீட்டின் முன்னர் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அதில் ரவிச்சந்திரன் என்ற தொண்டர் தினகரனுக்கு ஆதரவாக தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தடுத்துநிறுத்தி மீட்டனர்.