சிறையில் இருக்கும் ராம்குமாரின் பேஸ்புக்கை பயன்படுத்திய திலீபன் மகேந்திரன்!
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரது பேஸ்புக்கில் இருந்து நேற்று பதிவு ஒன்று வெளியானது.
சிறையில் இருக்கும் ராம்குமார் எப்படி பேஸ்புக்கில் பதிவிட்டார் என பலரும் ஆச்சரியத்துடன் அந்த பதிவை பார்த்தனர். பின்னர்தான் தெரியவந்தது இந்த பதிவை செய்தது திலீபன் மகேந்திரன் என்பவர்.
திலீபன் மகேந்திரன் என்பவர் கடந்த ஜனவரி மாதம், இந்திய தேசிய கொடியை எரித்து அதனை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் மூலம் வெளியிட்டு பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தினார். இதில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பேஸ்புக் மூலம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திலீபன் மகேந்திரன். இவர் ராம்குமாரின் பேஸ்புக் பாஸ்வேர்டை அவரது வழக்கறிஞரான ராமராஜ் மூலம் சிறையில் இருக்கும் ராம்குமாரிடம் இருந்து பெற்று, ஸ்வாதிய அறஞ்சவன் எவன்டா? என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் சுவாதி கொலை வழக்கில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை உள்ளடக்கிய கேள்விகள் உள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.