குக்கர் சின்னத்தை காப்பாற்ற தினகரன் கேவியட் மனு தாக்கல்
டெல்லி உயர்நீதிமன்றம் ஒதுக்கிய குக்கர் சின்னத்தை காப்பாற்ற டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன்.எனவே செண்டிமெண்டாக தனக்கு குக்கர் சின்னத்தையே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், அவர் தனது கட்சிக்கு பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஒன்றை வைக்க அனுமதி வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தால், தங்கள் தரப்பு அபிப்ராயத்தை கேட்க வேண்டும் என தினகரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.