ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (16:52 IST)

மு.க.ஸ்டாலின் வெளியிட்டது போல பிரதமர் மோடி வெளியிடுவாரா? –தயாநிதி மாறன் சவால்!

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி குறித்த விரிவான தகவல்கள் பகிரப்பட்டது போல பிரதமர் கொரோனா நிவாரண நிதி தகவல்களும் பகிரப்படுமா என தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று முதல்வர் கொரோனா நிவாரண நிதியில் பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசியல்ம் சினிமா பிரமுகர்கள் என பலர் ஆன்லைன் மூலமாகவும், நேரிடையாகவும் தங்களது நிதியை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்த தகவல்கள் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.69 கோடி இதுவரை கிடைத்துள்ள நிலையில் அதில் ரூ.50 கோடியை மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி தயாநிதி மாறன் “மதிப்பிற்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்கிறார். முதல்வர் நிவாரண நிதிக்கு பண வரவு மற்றும் செலவினங்கள் மக்கள் பார்வைக்கு நேரடியாக வைக்கப்படுகின்றன. பிரதமர் மோடியும் பிஎம்கேர் நிதி விவரத்தை இதேபோல வெளியிடுவாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.