1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (15:32 IST)

தனபாலுக்கு துணை முதலமைச்சர் பதவி? - எடப்பாடி போடும் புது கணக்கு

சபாநாயகர் தனபாலுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.


 

 
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து, அவர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார் தினகரன். இதன் எதிரொலியாக, அவரை ஆதரிக்கும் 19 அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் சமீபத்தில் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். மேலும், தற்போது அந்த எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த விவகாரம், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாக 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால், எதிராக 120 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், ஆட்சியை தக்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. 
 
அதே நேரத்தில் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் 37 எம்எல்ஏக்கள் இருப்பதாக சசிகலாவின் தம்பி திவாகரன் கூறி வருகிறார். மேலும் சபாநாயகராக இருக்கும் தனபால் முதல்வராக வரவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
 
சபாநாயகர் தனபால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர், அதிமுகவில் 30-க்கும் மேற்பட்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் உள்ளதால் தனபாலை முதல்வராக முன்னிறுத்துவது எடப்பாடி பழனிச்சாமிக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுக்கும் என திவாகரன் திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதனால்தான், ஓ.பி.எஸ், எடப்பாடி இல்லாத அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என திவாகரன் கூறி வருகிறார்.


 

 
இந்த சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் சபாநாயகர் தனபாலுடன் தலைமைச்செயலகத்தில் இன்று காலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
 
அதன்படி திவாகரன், மற்றும் தினகரன் தரப்பை சமாளிக்க, தனபாலுக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படலாம் எனப் பேசப்படுகிறது. ஏற்கனவே துணை முதலமைச்சராக ஓ.பி.எஸ் இருந்தாலும், தனபாலையும் மற்றொரு துணை முதலமைச்சராக நியமிக்க வாய்ப்பிருக்கிறது என தலைமை செயலக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.