அமைதியாக இருங்கள் ; சரியான நேரத்தில் முடிவெடுப்பேன் - களம் இறங்கும் தீபா


Murugan| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (15:07 IST)
தன்னை முன்னிறுத்தி பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் எனவும், அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் அமைதி காக்க வேண்டும் எனவும் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 
ஜெ.வின் மறைவுக்கு பின், அவரின் நீண்ட நாள் தோழி சசிகலா, அதிமுக கட்சியின் தலைமையை ஏற்று வழிநடத்திச் செல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர். இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவிலும், அவரை பொதுச்செயலாராக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
 
ஒருபக்கம், சசிகலாவின் தலைமையை விரும்பாதவர்கள், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை முன்னிறுத்தி தமிழகத்தின் சில இடங்களில் பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். மேலும், தீபா பேரவையும் தொடங்கப்பட்டது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தீபா “ தன் மீது அன்பு செலுத்தி, தன்னுடைய புகைப்படத்துடன் கூடிய பேனர் மற்றும் போஸ்டர்களை ஒட்டும் வேலையில் அதிமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டாம். நாட்டின் வளர்ச்சி, அதிமுகவின் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது.
 
எதிர்கால நலன் கருத்தி சரியான நேரத்தில் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பேன். அதுவரை அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :