செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 9 ஜனவரி 2017 (11:02 IST)

ஜனவரி 17ம் தேதி புதிய கட்சி தொடங்கும் தீபா..

தனது அரசியல் பயணம் எம்.ஜி.ஆர் பிறந்த நாளான வருகிற 17ம் தேதி அன்று ஆரம்பம் என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, தனது ஆதரவர்களிடம் கூறியுள்ளார்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமரவைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.   
 
சசிகலாவின் தலைமையை பிடிக்காத அதிமுக தொண்டர்கள், அந்த கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அதில் சிலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கும் செல்லும் அவர்கள் அவரை நேரில் பார்த்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுக்க பல இடங்களில் அவரின் பெயரில் பேரவை துவங்கி வருகின்றனர்.
 
இந்நிலையில், நேற்று விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், ஒசூர், கிருஷ்ணகிரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் சென்னை மாநகர பகுதியில் இருந்து ஏராளமானோர் அவருடைய இல்லத்திற்கு சென்று அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். 


 

 
அவர்களிடம் பேசிய தீபா “என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆசி நமக்கு தேவை. எனவே எம்.ஜி.ஆரின் நூற்றாண்டான வரும் 17ம் தேதி முதல் என்னுடைய அரசியல் பயணம் தொடங்கும். அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப நம் நடவடிக்கைகள் வருங்காலத்தில் அமையும். உங்களுக்காக நான் பணியாற்றுவேன்” என பேசியுள்ளார்.
 
இதிலிருந்து வருகிற 17ம் தேதி அவர் தனது புதிய கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.