வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (11:17 IST)

ராமேஸ்வரத்தில் பதற்றம்: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை எதிரொலி

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து ராமேஸ்வரத்தில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
 
கடந்த 2011 நவம்பர் 28 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லாங்நெட் ஆகிய ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். பின்னர் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 
 
மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த தகவல் வெளியானதும் ராமேஸ்வரம் மீனவர்கள் கொதிப்படைந்தனர். ஆண்கள், பெண்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் பாம்பன்-தங்கச்சிமடம் இடையே சாலைகளில் நேற்று மாலை 4 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். இலங்கை மற்றும் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
 
ஆத்திரமடைந்த அவர்கள் தங்கச்சிமடம் அருகே ரயில்வே தண்டவாளத்தை தகர்த்தெடுத்தனர். அப்போது, மறியலில் ஈடுபட்டிருந்த சிலர் அக்காள்மடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துக்கு தீ வைத்தனர். இதில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. கட்டைகள், மரங்களை சாலைகளில் போட்டு தடைகளை ஏற்படுத்தினர். லாரி டயர்களை சாலைகளில் போட்டு எரித்தனர்.
 
அடுத்தடுத்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததால், பசும்பொன்னில் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தங்கச்சிமடம் பகுதிக்கு விரைந்தனர். ஆனாலும், மீனவர்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கும்வரை மறியல் தொடரும் என மீனவர் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதனால் இப்பகுதியில் சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.