வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 4 பிப்ரவரி 2017 (11:32 IST)

நந்தினியை கும்பல் பலாத்காரம் செய்து கருவை எரித்த வழக்கு: இந்து முன்னணியினர் மீது குண்டர் சட்டம்

தலித் சிறுமி நந்தினி, கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இந்து முன்னணியின் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த தலித் சிறுமி நந்தினி (16), கடந்த டிசம்பர் 26ஆம் தேதி காணாமல் போனார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அதனைக் கண்டுகொள்ளவில்லை. பல்வேறு அமைப்புக்கள் நடத்திய போராட்டத்திற்குப் பின், ஜனவரி 14 தை திருநாள் அன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் நந்தினியின் உடல் மீட்கப்பட்டது.

விசாரணையில், அதே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த, இந்து முன்னணியின் ஒன்றியச் செயலாளரான மணிகண்டன், நந்தினியை காதலித்து அவரை கர்ப்பமாக்கியதும், நந்தினி திருமணத்திற்கு வற்புறுத்திய நிலையில், அவரை ஏமாற்றி தனியாக வரவழைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கும்பலாக வல்லுறவுக்கு உள்ளாக்கி, மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்து கிணற்றில் வீசியிருப்பதும் தெரியவந்தது.

நந்தினியின் வயிற்றில் இருக்கும் கரு தன்னை காட்டிகொடுத்து விடும் என்ற அச்சத்தில், இரும்புக் கம்பி மூலம் நந்தினியின் வயிற்றில் இருந்த கருவை வெளியே உருவி எரித்திருப்பதும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக நந்தினி வீசப்பட்ட கிணற்றில் நாய் ஒன்றையும் கொன்று, அதன் உடலையும் கிணற்றில் போட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நந்தினி காணாமல் போய் 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் மீட்கப்பட்டது. குற்றவாளிகள் யார் என்பதும் தெளிவாக அடையாளம் காணப்பட்டு விட்டது. ஆனால், காவல்துறை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆங்காங்கே போராட்டங்கள் நடந்த பின்பே, சம்பவம் நடந்து 20 நாட்களுக்குப் பிறகு காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

அப்படியும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை. இடதுசாரிகள், மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் மாநிலம் முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்தியதற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக இப்பிரச்சனை ஊடக வெளிச்சத்திற்கு வந்தது.

நந்தினிக்கு இழைக்கப்பட்ட அநீதியை சமூக வலைத்தளங்கள் உலகம் முழுமைக்கும் கொண்டு சேர்த்தன. அதன்பிறகே மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நந்தினி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிகண்டனை குண்டர் சட்டத்திலும் கைது செய்யுமாறு அரியலூர் ஆட்சியர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.