1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (15:53 IST)

தலித்துகளின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தலித்துகளின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாற்றியுள்ளார்.
 
இது குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தலித்துகளின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலித்துகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக வேண்டிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது.
 
சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட சிறைச்சாலை குறித்த புள்ளிவிவரங்கள் எல்லோரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
 
இந்தியாவில் தடுப்பு காவல் சட்டத்தின்படி 2014 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா முழுவதும் சிறையில் இருக்கும் 3,237 பேரில் 1,892 பேர் அதாவது, 58 சதவீதம் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்கிற செய்தி அதிமுக அரசின் மனித உரிமைக்கு எதிரான போக்கை உறுதிப்படுத்துகிறது.
 
தமிழகத்தில் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் இருப்பவர்களில் 1,002 பேர், அதாவது 53 சதவீதத்தினர் தலித்துகள் என்பதுதான் எல்லாவற்றையும்விட மிகக் கொடூரமான நடவடிக்கையாகும். 
 
எந்த தலித் மக்களை ஆட்சியாளர்கள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு அரவணைத்து பாதுகாக்க வேண்டுமோ, அவர்களை எவ்வித காரணமும் இல்லாமல் தடுப்பு காவல் சட்டம் என்கிற போர்வையில் நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு அரசு பதில் சொல்லியாக வேண்டும்.
 
அதேபோல தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் மேலும் புள்ளி விவரங்களோடு உறுதிப்படுத்துகிறது.
 
எனவே, தமிழகத்தில் அதிகரித்து வரும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கும், தடுப்பு காவல் சட்டத்தின் படி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலித்துகளின் உண்மை நிலையை அறிந்து கொள்ள வெள்ளை அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.