வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (21:28 IST)

வழக்கறிஞர்கள் குற்றப்பின்னணி விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

வழக்கறிஞர்கள் குற்றப்பின்னணி விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
குற்றப்பின்னணி கொண்டவர்கள் வழக்கறிஞர்கள் ஆவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள செயல் வழக்கறிஞர் தொழிலின் மாண்பை பாதுகாக்கும் வகையில் வழங்கப்பட்டதீர்ப்பாகும். இந்த தீர்ப்பு வரவேற்கத் தக்க ஒன்றாகும்.
 
சட்டப்படிப்பை முறையாக பயிலாத, குற்றப்பின்னணி கொண்ட பலர் வழக்கறிஞர்கள் ஆவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி எஸ்.எம். ஆனந்த முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.
 
வழக்கறிஞர்கள் தொழில் மிகவும் புனிதமானது. அனைத்துத் தரப்பு மக்களும் நீதி பெறுவதற்கான கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்களும், அதை பெற்றுத் தருவதற்கான கருவியாக வழக்கறிஞர்களும் தான் திகழ்கின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
 
ஆனால், நெல்லுக்கு நடுவே சில களைகள் முளைப்பதைப் போல அறிவார்ந்த வழக்கறிஞர்கள் நிறைந்த தமிழகத்தில், குற்றப்பின்னணி கொண்ட சிலரும் வழக்கறிஞர் ஆனார்கள். இவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, வழக்கறிஞர்கள் என்பவர்கள் சட்டத்தை காப்பவர்கள் என்ற நிலை மாறி, சட்டத்தை உடைப்பவர்கள் என்ற நிலைமை ஏற்பட்டதன் விளைவு தான் இப்படி ஒரு தீர்ப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது.
 

வழக்கறிஞர்கள் என்றால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறி வழக்கறிஞர்கள் குறித்த மதிப்பீடு குறைந்து விட்டது. இதற்குக் காரணம், அப்பாவிகளுக்கும், நிரபராதிகளுக்கும் நீதி பெற்றுத் தருபவர்கள் தான் வழக்கறிஞர்கள் என்ற தர்மம் மறைந்து குற்றவாளிகளுக்கு உதவுபவர்களும், அவர்களை காப்பாற்றுபவர்களும் தான் வழக்கறிஞர்கள் என்ற புதிய வரையரை உருவானது தான்.
 
உண்மையில், இப்போதும் பார்த்தால் தமிழ்நாட்டில் நீதிமன்றம் சென்று வாதிடும் வழக்கறிஞர்களில் பெரும்பான்மையானோர் தங்கள் தொழிலை தெய்வமாக மதித்து வழிபடுபவர்கள். ஆனால், சட்டத்தை மதிக்காத ஒரு சிலர் மேற்கொள்ளும் சட்ட விரோத செயல்கள் தான் ஒட்டு மொத்த வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
 
மாண்பு மிக்க ஒரு தொழிலை மேம்படுத்தும் நோக்குடன் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பை மத்திய, மாநில அரசுகளில் தொடங்கி வழக்கறிஞர்கள் சமுதாயம் வரை அனைத்துத் தரப்பினரும் வரவேற்க வேண்டும். தீர்ப்பில் இடம் பெற்றுள்ள அம்சங்களில் சாத்தியமான அனைத்தையும் சட்டமாக்கி செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.
 
அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள பரிந்துரைகள் அனைத்தும் பொதுப்படையானவை என்பதால், அவற்றால் அப்பாவி வழக்கறிஞர்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான அம்சங்களும் ஏற்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
 
வழக்கறிஞர்களின் நடத்தை குறித்து குற்றச்சாற்றுகள் எழுப்பப்படும் நிலையில், நீதிபதிகளும் ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் அனைத்து நிலை நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து விதிமுறைகளை வகுத்து செயல்படுத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.