1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (23:51 IST)

பெண்களின் பாதுகாப்புக்கான 13 அம்ச திட்டம் என்ன ஆனது? மு.க.ஸ்டாலின் கேள்வி

பெண்களின் பாதுகாப்பிற்காக 13 அம்ச திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளதாக கூறினாலும், இந்த ஆட்சியில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
பெண்களின் பாதுகாப்பிற்காக 13 அம்ச திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்று அதிமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தாலும், அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதில் ஒரு ஆபத்தான திருப்பம் என்னவென்றால் மாநிலத்தில் உள்ள சில போலீஸ் அதிகாரிகளே கற்பழிப்பிலும், பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவோராக மாறியிருப்பதுதான். "வேலியே பயிரை மேயும்" இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது.
 
பெண் முதல்வர் ஆளும் மாநிலத்தில் மைனர் பெண்ணை கற்பழித்தார் என்ற குற்றச்சாட்டில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே கைது செய்திருப்பது, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு வேதனை மிகுந்த உதாரணமாக இருக்கிறது.
 
அதுவும் பொது நல வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபிறகுதான் இந்த முதல் கட்ட கைது நடவடிக்கை கூட எடுக்கப்பட்டிருக்கிறது என்பது அதிமுக ஆட்சியில் சாதாரண குற்றங்களி்ல் மட்டுமல்ல, மிகவும் கொடூரமான கற்பழிப்புக் குற்றங்களில் கூட காவல்துறை சுதந்திரமாக செயல்படாது என்பதைத்தான் திரும்பத் திரும்ப எடுத்துக் காட்டுகிறது.
 
மைனர் பெண் கற்பழிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் தலையிடும் வரை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் பணத்தை விளம்பரங்கள் என்ற போர்வையில் வீண் செலவு செய்வதில் அதிமுக அரசு அக்கறை செலுத்துவதை தவிர்த்து, சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டவும், குறிப்பாக மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என குற்றம் சாட்டியுள்ளார்.