செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 30 ஜூன் 2016 (10:48 IST)

ராமஜெயம் கொலை வழக்கில் சிபிசிஐடி-க்கு இறுதி கெடு

முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், சிபிசிஐடி ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கெடு விதித்துள்ளது.
 

 
பிரபல தொழில் அதிபரான ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடத்திக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் ராமஜெயத்தின் உடலை கட்டுக் கம்பியால் கட்டி திருவளர்சோலை அருகே முட்புதரில் வீசிச் சென்றனர்.
 
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
அப்போது முதல் 12 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை இந்த வழக்கை விசாரித்து வந்தது. சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
 
இதனால், வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளை பிடிக்கபலமுறை அவகாசம் கேட்டு வந்தனர். எனினும் இப்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
 
இந்நிலையில், நேற்று புதனன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேலும் 2 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது அனுமதி வழங்க மறுத்துவிட்ட நீதிபதி தேவதாஸ், ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.