வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 26 நவம்பர் 2016 (15:42 IST)

மோடிக்கு நன்கொடை கொடுத்தவர்களை கூற முடியுமா?: திருமாவளவன் காட்டம்

பாஜகவுக்கு யார், யார் தேர்தல் நன்கொடை என்பதை தெளிவுப்படுத்த முடியுமா? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ”பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறாரா? அல்லது மீட்க நடவடிக்கை எடுக்கிறாரா? கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி எடுத்த திட்டம் தவறானது. இதனால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி கருப்பு பணம் நோட்டுகளை மட்டும் தான் ஒழிக்கிறாரே தவிர கருப்பு பணம் உருவாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மோடியின் இந்த நடவடிக்கையை முதலில் அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை.

பின்னர் மக்கள் படும் கஷ்டத்தை பார்த்த பிறகுதான் அவரது கருப்பு பண நடவடிக்கை முற்றிலும் தவறானது என்பது தெரிந்தது. மோடியின் நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் கருப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் என்று பாஜகவினர் கூறுகிறார்கள்.

மோடி இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் தேர்தலில் எவ்வளவு செலவு செய்தார் என்று சொல்ல முடியுமா? தேர்தல் கமி‌ஷன் விதித்த விதிமுறைக்குட்பட்டது தான் செலவு செய்தாரா? பாஜகவுக்கு யார், யார் தேர்தல் நன்கொடை என்பதை தெளிவுப்படுத்த முடியுமா? கருப்பு பணத்தை ஒழிப்பதாக மோடி நாடகமாடுகிறார். இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது.

கருப்பு பணம் பற்றி ஆளும் கட்சி மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது. மக்களின் நலன் கருதி இதை திரும்ப பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.