வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:00 IST)

திருவிழாவிற்கு செல்லும் பொதுமக்களுக்கு உடை கட்டுப்பாடு - நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பிற்கு மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

 
திருச்சி மாவட்டம், மருங்காபுரியில் உள்ள அக்கியம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் குடமுழுக்கு விழவை ஒட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு மீதான விசாரணை முடிவில் நீதிபதி வைத்தியநாதன் அளித்துள்ள தீர்ர்ப்பில், ”கோவிலுக்கு செல்லும் பக்த கோடிகளுக்கு! ஆண்களுக்கு வேட்டி, சட்டை அல்லது பைஜாமா; பெண்களுக்கு புடவை, தாவணி, துப்பட்டா உள்ள சுடிதார்; குழந்தைகளுக்கு உடலை முழுவதுமாக மறைக்கக்கூடிய உடை. இந்த உடைக்கட்டுப்பாடு கோவிலில் நிலவும் ஒரு `பக்திமய சூழலை மேம்படுத்த’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த உடைக்கட்டுப்பாடு, மேற்படி வழக்கில் கோரியிருக்கும் நிவாரணத்திற்கும் வழக்கின் சாராம்சத்துக்கும் சம்பந்தமில்லாத ஒன்று என்பதை விட, அரசியல் சட்டத்துக்கு புறம்பானது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் விமர்சித்துள்ளது.
 
இதுதொடர்பாக அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக விடப்பட்டுள்ள அறிக்கையில், `நீதிமன்ற உடைக் கட்டுப்பாட்டுக்குள் உட்படாத உடைகளை அணிந்து வரும் ஆண், பெண், ஏன் ஒரு குழந்தைகூட நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது’ என சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
மேலும் அந்த அறிக்கையில், ”தமிழ்நாட்டை சேர்ந்த வழிபாட்டு ஸ்தலங்களில் இதுவரை எங்கும் இதுபோன்ற உடைக்கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையில், நீதிமன்றம் புதிதாக இம்முறையை புகுத்துவது அபாயகரமானது என்று நாங்கள் கருதுகிறோம்.
 
மேலும் குழந்தைக்குகூட உடைக்கட்டுப்பாடு என்பது பகுத்தறிவற்ற, அடிப்படைவாத, பிற்போக்கான நிலைபாடு என்று கருதுகிறோம். இந்த தீர்ப்பில் விதிக்கப்பட்டிருக்கும் உடைக் கட்டுப்பாட்டின்படி இந்த தீர்ப்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தியிலிருந்து மேல் சட்டை அணியாத எத்தனையோ உழைப்பாளி மக்கள் வரை அனுமதி மறுக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
 
வழிபாட்டு ஸ்தலங்களில் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அரசியல் சட்டத்திற்கு விரோதமான ஜனநாயகமற்ற வழிமுறைகள் பின்பற்றப்படும்போது அதில் தலையிட்டு அக்கட்டுப்பாட்டை அகற்றி, ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட நீதிமன்றங்கள் பெரும் பங்காற்ற வேண்டியுள்ளது.
 
இந்நிலையில் இதுபோன்ற உடைக் கட்டுப்பாட்டை நீதிமன்றமே விதிக்கும் போது ஏற்கனவே நாட்டில் மக்கள் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்று உத்தரவு போடும் காலாச்சாரக் காவலர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளும் அபாயம் இருக்கிறது என்பதை கவலையோடு பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.