100-ஐ எட்டும் பெட்ரோல்... 100 இடங்களில் போராட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சையில் 100 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.23 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.90.38 ஆகவும் உள்ளது. இதனிடையே, ராஜஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.24 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே துவக்கத்தில் இருந்தே பெட்ரோஒல் - டீசல் விலை அதிகரித்து வருவதால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டி விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சையில் 100 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. இதனோடு, செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசிடம் ஒன்றிய அரசு ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளனர். மேலும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே தரக் கோரியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.