1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2016 (12:03 IST)

தேமுதிகவின் தனித்து போட்டி முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து.

தேமுதிகவின் தனித்து போட்டி முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து.

தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து போடியிடும் என நேற்று நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் விஜயகாந்த் தெரிவித்தார். விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.


 
 
பல்வேறு கட்சிகள் விஜயகாந்த் தன் பக்கம் வர வேண்டும் என கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. நீண்டு நெடும் போராட்டத்துக்கு பின் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
வைகோ: தேமுதிக தனித்து போட்டியிடும் என்று மகளிர் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக அரசியலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சியும் ஆட்சிக்கு வர கூடாது என்ற தேமுதிகவின் நிலைப்பாடு தமிழக அரசியலில் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் என்றார் மதிமுக பொதுச்செயலாளார் வைகோ.
 
அன்புமணி: தேமுதிக இதற்குமுன் பலமுறை மக்களுடன் தான் கூட்டணி, வேறு யாருடனும் கிடையாது என்று கூறி பின்னர் கூட்டணி வைத்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாநாட்டில் தனியாக போட்டியிடுவதாக கூறினார்.
 
ஆனால் பின்னர் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். தனித்து போட்டியிடுவதாக தற்போது கூறிய இந்த முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருப்பாரா என்பது தான் எனது கேள்வி என்று தெரிவித்துள்ளார் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.
 
தமிழிசை: தனித்து போட்டியிடுவோம் என்று விஜயகாந்த் அறிவித்தது அவர்களின் விருப்பம். அதே சமயத்தில் ஒரு விதத்தில் வரவேற்கத்தக்கது. ஏனென்றால் அவர்கள் ஊழல் கட்சிகளின் சாயல் இல்லாமல் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
எங்கள் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருந்தால் மகிழ்ந்து இருப்போம். அதே வேளையில் திமுக கூட்டணியில் இணைவார்கள் என்ற யூகங்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு ஊழல் கூட்டணிகளில் சேராமல் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.
 
தனித்தனியாக நின்று அவரவர் பலங்களை நிரூபிப்பது ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையே. கூட்டணி அமைக்க வேண்டும் என்று நினைத்தது வாக்குகள் பிரிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, மேலும் இந்த தேர்தல் பல சவால்களை சந்திக்க இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
 
ஜி.கே. வாசன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலன் சார்ந்து, தன் இயக்கம் நலன் சார்ந்து தனித்து போட்டி என்ற இறுதி முடிவை சட்டமன்ற தேர்தலுக்காக அறிவித்து இருக்கிறார் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.