இது நாங்க குடுத்த விண்ணப்பமே இல்ல! – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
கோயம்புத்தூர் மாநகராட்சி மாணவ்ர் சேர்க்கை படிவத்தில் மூன்றாம் மொழி படிப்பது குறித்து கேட்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் தமிழகத்தில் அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதை தொடர்ந்து தமிழகத்தில் மும்மொழி திட்டத்தை அமல்படுத்த முடியாது என்றும் இருமொழி கொள்கையே தொடரும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தில் “மூன்றாவது மொழி (இந்தி) எடுத்துக்கொள்ள விரும்புகிறாரா அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகபடியாக கற்றுக்கொள்ள விரும்புகிறாரா என்பது” என குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோவை மாநகராட்சி ஆணையர் சரவணன் “தற்போதைய சேர்க்கை விண்ணப்பத்தில் அப்படியான எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. இது பழைய விண்ணப்பமாகவோ அல்லது போலியானதாகவோ இருக்கலாம். அரசியலுக்காக யாரோ இதுபோன்று அச்சடித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.