வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (17:04 IST)

கோவை கலவர வழக்கு: 10ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி சிறை ‘ஹவுஸ்ஃபுல்’

கோவை கலவர வழக்கில் கைதானவர்களை அடைத்து வைக்க, திருச்சி மத்திய சிறையில் இடமில்லாததை அடுத்து, 40க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர்.
 

 
கோவையில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட 222 பேர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் நேற்று மதியம் வரை 191 பேர் திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
 
இவர்களை அடைத்ததால், திருச்சி சிறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பின. விசாரணைக் கைதிகளுக்கான கட்டிடங்களில் போதிய அளவு இடமில்லாததால், சிறை மருத்துவமனை பிளாக்குகளிலும் ஏராளமான கைதிகளை அடைத்துள்ளனர்.
 
அதன்பிறகு கொண்டுவரப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கைதிகளை வைக்க இடம் இல்லாததால், புதுக்கோட்டை கிளை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் திருச்சி சிறை முழுமையாக நிரம்பியுள்ளதாக சிறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.