வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (08:29 IST)

நள்ளிரவில் காணாமல் போன முதல்வர் பன்னீர்செல்வம்: எங்கு சென்றிருப்பார்?

நள்ளிரவில் காணாமல் போன முதல்வர் பன்னீர்செல்வம்: எங்கு சென்றிருப்பார்?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு எந்தவித போலீஸ் பாதுகாப்பும் இல்லாமல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் இன்று அதிகாலை தான் அவர் வீடு திரும்பியுள்ளார். அவர் போயஸ் கார்டனுக்கு தான் அவசர அவசரமாக சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
 
முதல்வராக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணமடைந்த பின்னரும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலமை மர்மமாகவே இருக்கிறது. அவர் முதல்வராக இருப்பதை சசிகலா விரும்பவில்லை எனவும், மத்திய அரசின் அழுத்தத்தின் பேரிலே அவரை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் எனவும் தினமும் பல்வேறு செய்திகள் வருகின்றன.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீடு மற்றும் அவரது தலைமைச் செயலக அறை, அவரது மகன் வீடு போன்றவற்றில் வருமானவரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை.
 
இந்த சோதனை சசிகலா மற்றும் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட சோதனை என அரசியல் கட்சிகளின் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து சசிகலா தரப்பு இதனை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
 
முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று வந்த மறுநாளே இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதால் போயஸ் கார்டனில் இருந்து முதல்வருக்கு அழைப்பு சென்றிருக்கிறது. இதனையடுத்து நள்ளிரவு போலீஸ் பாதுகாப்பு ஏதும் இல்லாமல் கிளம்பி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் அதிகாலை வரை சசிகலாவுடன் ஆலோசனை நடத்திவிட்டு அதிகாலை தான் வீடு திரும்பினார் என கூறப்படுகிறது.