Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2016 (14:30 IST)
தொலைப்பேசியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா!
தொலைப்பேசியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா!
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் உள்ள அவரது உடல்நிலை முற்றிலுமாக சரியாகிவிட்டது என கூறப்படுகிறது.
ஜெயலலிதா பூரண குணமாகி விட்டார் அவர் விரைவில் வழக்கமான பணிக்கு திரும்புவார் என கூறப்பட்டாலும் அவர் இன்னமும் மக்கள் முன் தோன்றவில்லை. அவர் பேசும் ஆடியோ பதிவும் வெளியாகவில்லை.
அவர் பேசுகிறார், தனக்கு தேவையானதை கேட்டுப்பெறுகிறார் என கூறப்பட்டாலும் எல்லாம் தகவல்களாகவே உள்ளது உண்மை நிலவரம் தெரியாது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தன்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தன்னுடைய தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக விசாலாட்சி நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் கூறியுள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவியுமான விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று நண்பகல் விசாலாட்சி நெடுஞ்செழியன் காலமானார். இதனையடுத்து அவரது மகன் மதிவாணைனை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்ட முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கலை தெரிவித்ததாக மதிவாணன் கூறியுள்ளார்.