வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (13:09 IST)

’மோடி தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தானில் சந்தித்தார்’ - ஆஷம் கான் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு மறுப்பு

’மோடி தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தானில் சந்தித்தார்’ - ஆஷம் கான் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு மறுப்பு

பாகிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி தாவூத் இப்ராஹிமை சந்தித்தார் என்ற ஆஷம் கானின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மத்திய அரசு நிராகரித்து உள்ளது.
 

 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, இந்தியா திரும்புகையில்  முன்னேற்பாடுகள் எதுவுமின்றி, திடீரென பாகிஸ்தானிற்கு சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார்.
 
இந்த பயணத்தின்போது நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கருதப்படும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை சந்தித்ததாக சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆஷம் கான் குற்றம்சாட்டி உள்ளார்.
 
அவர் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சென்றது சர்வதேச விதிகளை மீறி செயலாகும். அங்கு அவர் தாவூத் இப்ராஹிமையும் சந்தித்துள்ளார். என்னிடம் ஆதாரம் இருக்கிறது. மூடிய கதவுகளுக்கு பின்னால் அவர் யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?’’ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
 
இந்நிலையில், மத்திய அரசு ஆஷம் கானின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ‘‘இது தவறானது. அடிப்படை ஆதாரமற்றது’’ என்று குறிப்பிட்டார்.
 
உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆஷம் கானை நீக்கவேண்டும் என்று பாஜகவை சேர்ந்த சுதன்ஷு மிட்டல் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், ”மத நல்லிணக்கத்தை சீர்குலைத்த, தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள ஆஷம் கானை உடனடியாக அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.