1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (09:48 IST)

பார்க்கிங் கட்டணம் குறைவு, மாதாந்திர பாஸ் அறிமுகம்! – சென்னை மெட்ரோ அதிரடி சலுகைகள்!

சென்னை மெட்ரோ ரயில் சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளதால் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் மின்சார ரயில்கள் பயன்பாடு இல்லாததால் மக்கள் பலர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் பார்க்கிங் கட்டணத்தில் சலுகைகளை அளிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மெட்ரோ பார்க்கிங் கட்டணங்கள் அதிகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு 4 மணி நேரத்திற்கு ரூ.60க்கு பதிலாக ரூ.30 ஆகவும், 4-8 மணி நேரத்திற்கு ரூ.200 ஆக இருந்த கட்டணம் ரூ.75 ஆகவும், 8-12 மணி நேரத்திற்கு ரூ.340ல் இருந்து ரூ.150 ஆகவும், 24 மணி நேரத்திற்கான கட்டணம் ரூ.760லிருந்து ரூ.250 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கும் மேல் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தால் ரூ.300 செலுத்த வேண்டும்.

மேலும் மெட்ரோ ரயில்களில் பயணிக்க 3 நாள், 7 நாள் மற்றும் ஒரு மாத பாஸும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கான பாஸ் ரூ.500க்கும், 7 நாட்கள் பாஸ் ரூ.800க்கும், மாதாந்திர பாஸ் ரூ.3000க்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக செண்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் தொடங்கும் இந்த திட்டத்தை மற்ற மெட்ரோ நிலையங்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.