வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (09:11 IST)

நீட் தேர்வால் நடந்த தற்கொலைகள் – மாணவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு என்ன ?

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு என்ன இழப்பீடு வழங்கியுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாஜக அரசு அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. இது கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை பொய்யாக்கி வருகிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் அனிதா எனும் மாணவி கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதேப் போல இந்த ஆண்டும் ரிதுஸ்ரீ, வைஷ்யா மற்றும் மோனிஷா ஆகிய மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனால் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்துதல். தேர்வில் தோல்வியடையும் கவுன்சலிங் வழங்குதல் ஆகியவற்றை தமிழக அரசு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இவற்றை நிறைவேற்றவில்லை என சூர்யப்பிரகாசம் எனும் வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அதில் ‘நீட்டால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இதை ஏற்று விசாரித்த நீதிமன்றம் ‘தமிழகத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவ , மாணவிகளின் விவரம் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு என்ன இழப்பீடு வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் ‘ என உத்தரவிட்டுள்ளது.