செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (11:54 IST)

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

சென்னையில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

பொது இடத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது; அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே குப்பை கொட்ட வேண்டும். வியாபாரிகள் கண்டிப்பாக தங்கள் கடைகளில் குப்பை தொட்டி வைத்திருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.

ஆனால், விதிமுறைகளை மீறி, சென்னையின் தெருக்களில் பலர் குப்பைகளை கொட்டி வருவதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின் படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் குப்பைகளை கொட்டினாலும் அல்லது எரித்தாலும், ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் மரக்கடைவுகளை கொட்டினால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும், வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு அதை தூய்மை படுத்தாமல் சென்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சியின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Edited by Mahendran