37 கண்டெய்னர்களில் அம்மோனியம் நைட்ரேட்; இடம் மாற்ற திட்டம்! – பாதுகாப்பு தீவிரம்!
சென்னை மணலியில் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட்டை இடம்மாற்றும் வரை பலத்த பாதுகாப்பு அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பெய்ரூட் அம்மோனியம் நைட்ரேட் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் குறித்து கேள்வி எழுந்தது. மணலியில் உள்ள கிடங்கில் அவை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவற்றை ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அம்மோனியம் நைட்ரேட் உள்ள கிடங்கு குறித்து சுங்கத்துறை தெரிவித்த தகவல்களோடு, மாசுக்கட்டுப்பாட்டு துறையின் தகவல்கள் மாறுபட்டதாக உள்ளது. குறிப்பாக அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள கிடங்கிலிருந்து 2 கி.மீ தொலைவுக்கு மக்கள் வாழும் பகுதி இல்லை என சுங்கத்துறை தெரிவித்திருந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவல்களில் 700 மீட்டர் தொலைவிலேயே குடியிருப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அம்மோனியம் நைட்ரேட்டை தேவையானவர்களுக்கு ஏலம் மூலமாக அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், கிடங்கில் 37 கண்டெய்னர்களில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை இடம் மாற்றும் வரை பலத்த பாதுகாப்பு அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.