1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2015 (18:19 IST)

செல்போன் திருடிய மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரின் விரலை தீயிட்டு கொளுத்திய உறவினர்கள்

தர்மபுரியை சேர்ந்த வாலிபர் பவுன்ராஜ் கை விரல்கள் தீயில் கருகிய நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
பவுன்ராஜின் வலது கை ஆட்காட்டி விரல் முழுமையாக எரிந்துள்ளது. மணிக்கட்டுக்கு கீழ் ரத்த ஓட்டமும் பாதித்துள்ளது. தீக்காயத்துறை தலைவர் மருத்துவர் நிர்மலா பொன்னம்பலம் தலைமையில் மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
 
மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் வாலிபரின் உள்ளங்கை காப்பாற்றப்பட்டுள்ளது. கை விரல்களையும் காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வாலிபர் பவுன்ராஜின் அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அவரது தந்தை கிருஷ்ணன் (63) அமர்ந்து இருக்கிறார்.
 
மகனுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி கிருஷ்ணன் கூறியதாவது:–
 
நாங்கள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வேதவள்ளி கிராமத்தில் வசித்து வருகிறோம். எனது மகன் பவுன்ராஜுக்கு லேசாக மனநிலை பாதிப்பும் உள்ளது.
 
சம்பவத்தன்று உறவினர் ஒருவரின் வீட்டுக்கு பவுன்ராஜ் சென்றான். அங்கிருந்த செல்போனில் பாட்டு கேட்டுள்ளான். பின்னர் பாட்டு கேட்கும் ஆசையில் செல்போனை எடுத்து வந்து விட்டான்.
 
இதனால் ஆத்திரமடைந்து அவர்கள் 3 பேர் எனது மகனை அங்குள்ள ஒரு மாந்தோப்புக்கு அழைத்து சென்று மரத்தில் கட்டி வைத்துள்ளார்கள். பின்னர் அவனது வலது கையில் துணியை சுற்றி பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்கள். இதில் பலத்த தீக்காயம் அடைந்த பவுன்ராஜை உடனே பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் என்று அவர் கூறினார்.
 
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பாலக்கோடு காவல்துறை வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் ஒருவரை தேடி வருகிறார்கள்.