கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம்: மேலும் 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், முருகேசன் ஆகிய இருவரை கள்ளச்சாராய மரண விவகார வழக்கில் சிபிசிஐடி போலீஸ் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட ட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் பலியான வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் இன்னும் சில கைது நடவடிக்கைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva