வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 22 ஜூலை 2014 (11:29 IST)

காவிரி நடுவர் மன்ற விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களை விரைவில் விசாரித்து முடிக்கும்படி காவிரி நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு வழக்குரைஞர் பி.பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம் வருமாறு:-

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் விளக்கம் கேட்டு நடுவர் மன்றத்தில் கேரளம், தமிழகம், புதுச்சேரி ஆகிய அரசுகள் மனு தாக்கல் செய்துள்ளன.

இதற்கிடையே காவிரி நதி நீர்ப்பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் விசாரிக்கப்படும் வரை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்கக் கூடாது என்று கர்நாடகம் முரண்பட்ட நிலையை எடுத்துள்ளது.

கடந்த 2007, பிப்ரவரி 5ஆம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கு முரணாக காவிரி நீரைப் பயன்படுத்தி கர்நாடக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அவற்றை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே, நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்கும்படி 2012ஆம் ஆண்டில் தமிழக அரசு நடுவர் மன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அம்மனு 2012, ஏப்ரலில் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடுவர் மன்றத் தலைவராக இருந்த என்.பி.சிங் ராஜிநாமா செய்தார்.
2013, பிப்ரவரி 4ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, "காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் 2007, பிப்ரவரி 5இல் அளித்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும்“ என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டாலும், அது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கத் தடை இருக்காது என்று அப்போதே உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது.

இந்நிலையில், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு அவகாசம் கோரியதால், தீர்ப்பை அமல்படுத்துவதற்காக தாற்காலிக மேற்பார்வைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

ஆனால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த மேற்பார்வைக் குழுவால் முடியவில்லை. இதையடுத்து, மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் உதவியை தமிழக அரசு நாடியது.

கடைசியாக இந்த வழக்குகள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, காவிரி தொடர்புடைய நிலுவை மனுக்களை ஒன்றாகச் சேர்த்து கடந்த மார்ச் 12ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதன் பிறகு எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

இந்நிலையில், நடுவர் மன்றத் தலைவராக நீதிபதி சௌஹான் நியமிக்கப்பட்டு கடந்த 15ஆம் தேதி அதன் விசாரணை நடைபெற்றது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால், தன்னிடம் உள்ள நிலுவை மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறும்படி நடுவர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் மனுக்களை விரைவாக விசாரித்து முடிக்கும்படி காவிரி நடுவர் மன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இதன் மூலம் காவிரி விவகாரத்தில் நீதி கேட்டுப் போராடும் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் என்று மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.