1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (10:35 IST)

காவிரியில் புதிதாக அணைகள்: ரயில் மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு

விவசாயிகள் சங்கம் சார்பில், காவிரியில் புதிதாக அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், அ.சவுந்தரராஜன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
 
முட்டை கொள்முதல் விலையில் நடைபெற்றிருக்கும் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
 
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் மசோதா, நிலங்களைக் கையகப்படுத்தும் மசோதா என மக்கள் விரோத சட்டத் திருத்த மசோதாக்களை குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இந்த மசோதாக்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் இணைந்து நின்று முறியடிக்க வேண்டும்.
 
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகம் அணை கட்டினால், தமிழக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவர்.
 
இதனை எதிர்த்து அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது.
 
தமிழக போக்குவரத்துத் தொழிலாளர்களின் பழைய ஊதிய ஒப்பந்தம் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்துவிட்டது. 15 மாதங்கள் கடந்து விட்ட பின்பும், இதுவரையில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை.
 
போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்துக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
எனவே, மாநில அரசு அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆகிய 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.