வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 22 அக்டோபர் 2016 (12:02 IST)

கைது ஆவாரா டிராபிக் ராமசாமி? - முதல்வர் உடல் நலம் குறித்து வதந்தி

தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்து வதந்தி பரப்பும் நோக்கில் அவதூறான கருத்து தெரிவித்ததாக டிராபிக் ராமசாமி மீது இரு வழக்குகளை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

 
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 4 வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
 
இந்த வதந்திகளைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், முதல்வர் குறித்த அவதூறான தகவல்களை முகநூலில் பதிவு செய்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி மீது சில நாள்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தனர்.
 
அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்கள் வந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில் சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக 52 வழக்குகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார் 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.
 
இதற்கிடையே சமூக ஆர்வலர் கிஷோர் கே.சாமி கடந்த 13ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.
 
அந்தப் புகாரில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி யூ-டியூப், கட்செவி அஞ்சல் ஆகியவற்றின் மூலம் அவதூறு பரப்புகிறார்.
 
இதற்கு அவரது உதவியாளர் பாத்திமாவும் உடந்தையாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதேபோல வழக்குரைஞர் விஜயராஜும் புகார் தெரிவித்திருந்தார். இதன்பேரில் டிராபிக் ராமசாமி, பாத்திமா ஆகிய இருவர் மீதும் இரு வழக்குகளை வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்.