1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (10:43 IST)

கார் பந்தயத்தை இந்த பகுதியில் நடத்தக்கூடாது..! தலைமைச் செயலரிடம் அதிமுக கடிதம்..!!

Car Race
பொதுமக்கள் நலன் கருதி, அரசு தரப்பில் கவுரவம் பார்க்காமல் சென்னையின் பிரதான பகுதியில் கார் பந்தயம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் அதிமுக மனு அளித்துள்ளது.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை, தமிழக அரசும், ரேஸிங் புரமோஷன் நிறுவனமும் இணைந்து  சென்னையின் நெருக்கடியான சாலைகள் வழியே, கார் பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கார் பந்தயம் நிகழ்ச்சியை நடத்த அரசு விரும்புகிறது என்றும் இது ரோம் நகரம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த நிகழ்வுபோல் உள்ளது என்றும் அவர் கூறினார். சென்னையில், பார்முலா கார் பந்தயத்தை நடத்தினால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என தெரிவித்த அவர்  பந்தயம் நடக்கும்போது, பல பெரிய சாலைகள் மூடப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். 

Admk
பந்தயம் நடக்க உள்ள பகுதியில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட அதிமுக்கியமான இடங்கள் உள்ளன என்று அவர்  தெரிவித்தார். கார் பந்தயம் நடத்துவதற்கென்றே, சென்னையின் புறநகரான இருங்காட்டுக்கோட்டையில் சிறப்பான ஏற்பாடுகளுடன் நிரந்தர கட்டமைப்பு உள்ளது என்றும் அங்கு கார் பந்தயம் நடத்தினால், மக்கள் மத்தியில் அதீத முக்கியத்துவமும், நிகழ்ச்சிக்கு தன்னிச்சையான பிரபலமும் கிடைக்காமல் போகும் என்பதால், சென்னையின் முக்கியமான பகுதியில் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
 
சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்தினால் கட்டாயம் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கார் பந்தயம் நடத்தி உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டால், அது அரசு செய்த கொலையாகவே கருதப்படும் என்றும் எனவே, பொதுமக்கள் நலன் கருதி, அரசு தரப்பில் கவுரவம் பார்க்காமல் சென்னையின் பிரதான பகுதியில் கார் பந்தயம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதியின் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக கார் பந்தயம் நடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
அதனால் தான், கார் பந்தயத்தை சென்னையின் பிரதான பகுதியில் நடத்தக் கூடாது என, தலைமைச் செயலரிடம் அதிமுக சார்பில் கடிதம் கொடுத்திருப்பதாகவும், உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், மீண்டும் நீதிமன்ற உதவியை நாடுவோம் என்றும் அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை தெரிவித்தார்.