வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 20 டிசம்பர் 2014 (17:09 IST)

தமிழ் மொழியை அலுவலக மொழியாக சேர்க்க முடியாது - மத்திய அரசு உறுதி

தமிழ் உள்பட எந்த மொழியையும் இனி அலுவலக மொழியாக சேர்க்க முடியாது என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
 
டெல்லி மேலவையில் நேற்று சுதர்சன நாச்சியப்பன், தமிழ் மொழியை அலுவல் மொழியாக சேர்க்க வேண்டும் என்று தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார்.
 
அப்போது பேசிய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி கூறும்போது, ‘‘பல மொழிகளை அலுவல் மொழியாக சேர்ப்பதில் பல பின்விளைவுகள் உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் உள்பட பல வசதிகள் தேவைப்படுகிறது. எனவே இனி எந்த மொழியையும் அலுவல் மொழியாக சேர்க்க முடியாது’’ என்றார்.
 
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த அவர், இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது என்றார்.
 
அதேபோல், திருவள்ளுவர் பிறந்த தினத்தை தேசிய தமிழர் நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கைக்கும், ’பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள புகழ்பெற்ற புலவர்களின் பிறந்த நாளையும் தேசிய அளவில் கொண்டாட வேண்டும் என்று கூறுவதற்கு வழிவகுக்கும்’ என்றும் அவர் கூறினார்.