1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (15:47 IST)

தருமபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்  மற்றும் யார் யாருக்கு இந்த பணம் கிடைக்கும் என்பது குறித்து அறிவிப்பை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில்’ பயன் அடைய விண்ணப்பிக்கும் பயனாளர்களின் கைவிரல் ரேகை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென்று அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது

இன்று தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,  தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.

#கலைஞர்100-இல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

#கலைஞர்_மகளிர்_உரிமைத்_திட்டம்